ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதி அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது கரும்பு ஆலையிலிருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. அந்த லாரியின் பின்பக்க கதவு திடீரென திறந்ததன் காரணமாக கழிவுகள் சாலையில் கொட்டின.
இதனை அறியாமல் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கியதால் சிறிது தூரத்திற்கு கழிவுகள் சாலையி்ல் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதை கண்ட வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுநருக்கு தெரிய படுத்தினர். உடனே அவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார்.
சாலையில் கழிவுகள் கொட்டிய நிலையில் அச்சாலை வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் கழிவுகளால் சறுக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.