கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு இரவு நேரங்களில் அதிகமான கனரக மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், வால்பாறை கவர்க்கல் அடுத்துள்ள ஊமையாண்டி முடக்குப் பகுதியில் நேற்று (ஜூன் 05) இரவு ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த வேன் ஒன்றை எதிரே ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது.
இத்தகைய சூழலில், யானையைக் கண்ட வேன் ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். மேலும், அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் நின்றுகொண்டு வாகனங்களை வழிமறித்து போக்குகாட்டியதால், சுமார் ஒரு மணி நேரமாக அவ்வழியே வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கிடையே, அந்த வேன் ஓட்டுநர் சாலையில் வாகன ஓட்டிகளை வழிமறித்த அந்த ஒற்றை காட்டு யானையை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோகாட்சி தற்போது சமூகவலைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், ஊமையாண்டி முடக்குப் பகுதியில் சுற்றித் திரியும் அந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.