சென்னை:சென்னை திருவொற்றியூர் சக்தி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய் கிருஷ்ணா (வயது 44). இவர் மணலி போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் நேற்று (ஜன.17) வழக்கம்போல் மணலி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையை தொடர்ந்து நேற்று மாலை அவரது உடல் சக்தி கணபதி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. உயிரிழந்த ஜெய் கிருஷ்ணாவிற்கு சித்ரா என்ற மனைவியும் பூமிகா, லோகிதா என இரு மகள்களும் உள்ளனர். மூவரும் ஜெய் கிருஷ்ணாவின் உடலை அணைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த நிலையில், ஆவடி காவல் துறை ஆணையாளர் சங்கர் மற்றும் கூடுதல் ஆணையாளர் பவானி ஈஸ்வரி, மாதவரம் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜெய் கிருஷ்ணாவின் வீட்டிற்கு நேரடியாக வந்து மலர் வளையம் வைத்து ஜெய் கிருஷ்ணாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து உயிரிழந்த போக்குவரத்து காவலர் குடும்பத்திற்கு அதிகாரிகள் காவல்துறை சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியாக வழங்கினர்.
இதையும் படிங்க:ஆம்னி பேருந்து டூ கார்! கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி?
நேற்று மாலை காவலர் ஜெய்கிருஷ்ணா உடல் திருவொற்றியூர் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு காவல் உதவி ஆய்வாளர் முரளிகிருஷ்ணன் தலைமையில் 7 காவலர்கள் 3 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜெய்கிருஷ்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.