சென்னை:புதுச்சேரியில் இருந்து சென்னை (கிளாம்பாக்கம்) நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள திருச்சி - சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்திற்கு வண்டலூர் போக்குவரத்து காவலர்கள் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், நேற்றிரவு முதல் தற்போது வரை நோ பார்க்கிங் நிறுத்தப்பட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்டதை விட வேகமாகச் சென்றதாகவும் கூறி பல்வேறு இடங்களில் சுமார் 22 அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.