திருவண்ணாமலை:திருவண்ணாமலைநகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பருவம் சார்ந்த மற்றும் வட்டார உணவுகளைக் கொண்டாடும் வகையில் மாபெரும் இயற்கை உணவு திருவிழா இன்று நடைபெற்றது.
இதில், நமது முன்னோர்கள் பயன்படுத்தி தற்போது நாம் மறந்துபோன உணவு வகைகள், நெல் ரகங்கள், சிறு தானிய உணவு வகைகள், மூலிகைப் பொருட்கள், மூலிகை எண்ணெய்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தனித்தனி அரங்குகள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி சென்றனர்.
இந்த உணவு திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களை அமைத்து இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட விதை பயிர்களைப் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைத்துள்ளனர். காலை முதல் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவு திருவிழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய விதை பயிர் வகைகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் கந்த சாலா, பவானி, கிச்சடி சம்பா, தங்க சம்பா, பனி பயிர், கருப்பு ரவுனி, காட்டுயானம், ஆத்தூர் கிச்சடி, இலுப்பை சம்பா உள்ளிட்ட நெல் பயிர் வகைகள், திணை, வரகு, வெள்ளை கேழ்வரகு, சாமை போன்ற அரிசி வகைகள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகள், கலப்படமற்ற உணவு எண்ணெய், மலைத்தேன், கீரை காய்கறி விதைகள், இயற்கை பெருங்காயம் ஊறுகாய், சிறுதானிய காபி பொடி, இட்லிப் பொடி உள்ளிட்டவை இயற்கை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.