தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடங்க மறுக்கும் காளைகளுக்கு ஈடு கொடுக்கும் மாடுபிடி வீரர்கள்: களைகட்டிய திருநல்லூர் ஜல்லிக்கட்டு! - விராலிமலை திருநல்லூர் ஜல்லிக்கட்டு

Viralimalai Thirunallur Jallikattu: விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் தைத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Viralimalai Thirunallur Jallikattu
விராலிமலை திருநல்லூர் ஜல்லிக்கட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 7:08 PM IST

விராலிமலை திருநல்லூர் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் தைத்திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள திடலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி இன்று(பிப்.12) காலை 9.10 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அப்பகுதியைச் சேர்ந்த மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், ஆர்டிஓ செல்வி, கோட்டாட்சியர் தெய்வநாயகி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வாடிவாசல் முன்னாள் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினரின் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டு அவைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

வழக்கமாக இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கோ, சிறந்த காளைகளுக்கோ எந்தவிதமான பரிசுகளும் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் காளை வளர்ப்பவர்கள் பெரும்பாலானோர் திருநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் அவர்களது காளைகளை அவிழ்த்த பின்னரே, மற்ற வாடிவாசல்களில் அவிழ்ப்பதை காலம் காலமாக இன்று வரை கடைபிடித்து வரும் சம்பிரதாயமாகும் என்பது திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் தனிச்சிறப்பாகும்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் இப்போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஎஸ்பி தலைமையில் 4 டிஎஸ்பி, 10 இன்ஸ்பெக்டர், 62 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, ஊர்காவல் படை என 304 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டியில் காயம் அடையும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டித் திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான்கு ஆம்புலன்ஸ் வாகனம் விளையாட்டுத் திடல் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றால் அதை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வாகனம் நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுவரை 350 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன இப்போட்டியில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக மூன்று பேர் விராலிமலை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவையில் MyV3 Ads-க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details