விருதுநகர்:தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக சிறிய கடைகள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை பட்டாசு விற்பனையில் ஈடுபடுகின்றன.
அதே நேரத்தில் விபத்து உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்கவும் விதிமீறல்களைத் தடுக்கவும், பட்டாசு விற்பனைக்காக தமிழக அரசின் உரிமச் சான்றிதழ் பெறவேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தநிலையில் போலியான மற்றும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வணிகர் கூட்டமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இது குறித்து சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. மேலும் அரியலூர், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உரிமம் புதுப்பித்து வழங்குவதில் காலதாமதம் நிலவுவதால், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க:சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தீர்வு காண அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
ஆன்லைன் பட்டாசு வணிகத்தால், உள்ளூர் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில், சிலர் விதிகளை மீறி விற்பனை செய்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ 80 சதவீதம் தள்ளுபடி, 90 சதவீதம் தள்ளுபடி என அதிக சலுகை விலை அறிவித்து, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாசு வழங்காமல் ஏமாற்றுகின்றனர். இது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறோம்.
மேலும் பட்டாசு விற்பனை என்ற பெயரில் மோசடி செய்து வரும் நபர்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தடுக்க முயற்சி செய்து வருகிறோம்" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் சிலர் தரம் குறைந்த பட்டாசுகளின் விலையை உயர்த்தி 90 சதவீதம் தள்ளுபடி என விளம்பரப்படுத்தி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலியான சலுகை விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாறாமல், அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் பட்டாசு வாங்கி பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட வேண்டுகிறோம்" என தெரிவித்தார்.