சென்னை: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எம்.பி டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், "சென்னையைச் சேர்ந்தவர் மலையேறும் வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி நாராயணன். இவர், உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி உலகிலேயே முதல் பெண் வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த வீரசாகச சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு, அவருக்கு 'கல்பனா சாவ்லா' விருதை கடந்த 2023ஆம் ஆண்டில் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது. எவரெஸ்ட் மட்டுமல்லாமல் ஐரோப்பா, ஆப்ரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும், நாடுகளிலும் உள்ள மிக உயரமான சிகரங்களிலும் ஏறி இவர் சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அண்டார்டிகாவிலும் இத்தகைய மலையேறும் சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ள முத்தமிழ்ச்செல்வி நாராயணன், இந்த புது முயற்சியை டிசம்பர் 2024 இரண்டாம் வாரத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதற்காக முத்தமிழ்ச்செல்வி, சிலி நாட்டின் விசாவுக்காக விண்ணப்பித்துள்ளார். அக்டோபர் 10, 2024 அன்று மும்பையில் உள்ள சிலி நாட்டின் துணைத் தூதரகத்தில் இதுதொடர்பாக உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததுடன் அதற்கு அடுத்த நாளே (அக்.11) விசாவுக்கான நேர்முகக் காணலிலும் பங்கேற்றார். வழக்கமாக 30 நாட்களில் கிடைக்கும் சிலி நாட்டின் விசா, வீராங்கனை முத்தமிழ்ச்செல்விக்கு இதுவரை கிடைக்காத நிலையில், முத்தமிழ்ச்செல்வியின் அண்டார்டிகா மலையேறும் திட்டம் கேள்விக்குறி ஆகிவிட்டது.