ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். இங்குச் சுமார் 15 அடி உயரத்திலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் இங்குக் குளிப்பதற்காக, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்
அந்தவகையில், தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கொடிவேரி அணைக்குச் சுற்றுலாப் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்குக் குவிந்தனர்.
அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அணையின் கீழ் பகுதியான மணல் பகுதியில் அமர்ந்தும், அங்கு விற்பனை செய்யப்படும் சுவையான மீன்களை வாங்கி சாப்பிட்டும், பூங்காவில் விளையாடியும் உற்சாகமாக விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.
குறைந்த செலவில் இங்கு விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க முடியும் என்பதால் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடிவேரி அணைக்குச் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்ததைத்தொடர்ந்து அணைக்கு வருபவர்கள் தீவிரச் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டை எண்ணக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - Lok Sabha Election 2024