சுற்றுலாத் துறை அமைச்சர் பேட்டி கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வாலாங்குளம் படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த படகு இல்லம், அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ரயில்வே குடியிருப்புக்கு அருகே வரவுள்ளது. அந்த இடத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்தியாவிலேயே முதலிடத்தில் சுற்றுலாத் துறையைக் கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனடிப்படையில், இந்த சுற்றுலாத்துறை உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருவதில் முதலிடத்திலும், அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இருவரும் இணைந்து வருவதில் இரண்டாம் இடத்தில் உள்ளோம்.
உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாம் இரண்டாவது இடத்தில் உள்ளோம். நமது மாநிலத்தை முதலாவது இடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாவைப் பொறுத்தவரை, பொதுவாக எந்த அளவிற்கு ஆட்கள் வந்தாலும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.
அதே போன்று, சுற்றுலாப் பயணிகள் வருவதினால், இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படும். வருமானம் கூடும். எல்லோருக்கும் பொருளாதாரம் உயர்வதற்கு இந்த சுற்றுலாத் துறை முக்கிய ஒன்றாக இருக்கிறது. வாலாங்குளத்தில் படகு சவாரி போன்றவை செய்துள்ளோம்.
ஆனால், வாகனம் நிறுத்துவதற்கு இடம் இல்லை என்பதால், வேறு இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பரிந்துரை செய்துள்ளனர். சுற்றுலாத் துறை லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கூடுதலான லாபத்தில் இயங்கி வருகிறது. அதிகமான வருமானம் வந்தால், வருமான வரி கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக நம் மக்களுக்கு பயன்படுத்தினால், மக்கள் பயன்படுத்துவார்கள்” என்றார்.
படகு சவாரி கட்டணம் அதிகமாக இருப்பதாக குறித்த கேள்விக்கு, "கட்டணம் குறித்து ஆய்வு செய்து குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் கட்டணம் பெரிதாகத் தெரியாது. குறிச்சி குளத்தில் படகு சவாரி குறித்து ஆய்வு செய்த பிறகு நான் கூறுகிறேன்” என்றார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்காது என பிரதமர் கூறிய கேள்விக்கு, "தமிழ்நாட்டில் திமுக இருக்காதா, இல்லையா என்பது மக்களுக்குத் தெரியும். பாஜக இருக்காதா, திமுக இருக்காதா என்பதை பொறுத்து இருந்து பாருங்கள். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக நிச்சியமாக வெற்றி அடையும். எந்த சந்தேகமும் வேண்டாம். அதிமுக சவால் விட்டாலும், ஆ.ராசா தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்” என்றார்.
இதையும் படிங்க:திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி.. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து!