சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குருப்-1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர் - 16, துணை காவல் கண்காணிப்பாளர் - 23, உதவி ஆணையர் வணிக வரி - 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்-21, உதவி இயக்குனர்(ஊரக வளர்ச்சி)- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஒருவர் என மொத்தம் 90 காலி இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 நபர்கள் விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில், அவர்களில் எட்டு பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 726 ஆண்களும், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 501 பெண்களும் , மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்காக 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 124 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 38 ஆயிரத்து 891 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. பொதுஅறிவில் 175 கேள்விகளும், மனத் திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகளும் என 200 கேள்வி இடம் பெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குரூப் 1 பணிக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் நடைபெறும். முதன்மைத் தேர்வினை எழுதுவதற்கு தகுதிப் பெற்றுள்ள தேர்வர்கள் ஆவணங்களை செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்களின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுத் தொடர்பான தகவல்கள் கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படாது. தேர்வாணையத்தின் இணையதளம், எஸ்எம்எஸ், இமெயில் போன்றவற்றின் மூலம் அனுப்பி வைக்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.