சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு வரும் செப் 14ம் தேதியன்று முற்பகல்
நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்படுவார்கள்.
தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வு தொடர்பான மந்தண பொருட்கள் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க :நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு.. தடைக்கோரிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு - TNPSC Group 2 Exam Case
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Video graph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக
போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து மையத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ
வசதிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்களுக்கு அறிவுரை : விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள். மேலும், இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என அதில் கூறப்பட்டுள்ளது.