சென்னை:கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் மருத்துவப் பிரிவின் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது. இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த மருத்துவரை தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக, அவசர சிகிச்சை தவிர பிற சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள மருத்துவர்கள், மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம், கோவை மாவட்டங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, மருத்துவரை தாக்கிய நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டம் நடத்தி சில தீர்மானங்களை எடுத்துள்ளது. அதை கீழ்வருமாறு காணலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க (TNGDA) தீர்மானங்கள்:
- கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய செயலை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
- மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் மற்றும் BNS குற்றவியல் சட்டத்தின் கீழ் மருத்துவரை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அனைத்து மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
- பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து; சென்னையில் பயங்கரம்!