திருநெல்வேலி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நெல்லையில் தொடங்கியது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுகளுக்கு உட்பட்டவர்களுக்கு என மூன்று பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என இரு பாலருக்குமான நீச்சல் போட்டிகள் பாளையங்கோட்டை சீவலப்பேரி சலையில் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் ஃப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பிளாக் ஸ்ட்ரோல் என 47 வகைகளில் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் முதலிடம் பிடித்த வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுகிறார்கள். தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1300 மாணவிகள் 2065 மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் இன்று தொடங்கி 25ஆம் தேதி வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், அவ்வாறு ஆளுநர்கள் செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. தீர்மானங்கள் குறித்து யோசிக்காமல் அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தும் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்தும் பேசினேன். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டதையும் தெளிவாக எடுத்துரைத்தேன். இது குறித்து பேச அனுமதி மறுத்ததுடன் உங்களது பேச்சு பதிவாகாது என ராஜ்ஜிய சபா துணைத் சபாநாயகர் தெரிவித்தார்.