தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயாரா? கடம்பூர் ராஜூ கேள்வி! - KADAMPUR RAJU

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ
பொதுக்கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 12:27 PM IST

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட கலைப் பிரிவு மற்றும் கிழக்கு ஒன்றிய சார்பில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில், "எம்ஜிஆர் அதிமுகவை துவங்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழகமே இருந்திருக்காது. கொள்ளையடிப்பது ஒரு கலை என்று திரைப்படத்தில் கூறியதை நிரூபித்து காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்துள்ளனர். 2 ஜி ஊழல் வழக்கினை பற்றி உலகமே பேசியது. அப்படிப்பட்ட வரலாறு திமுகவுக்கு உள்ளது.

பகல் வந்தால் இரவு வரும்.... பௌர்ணமி வந்தால் அமாவாசை வரும்... அதே போன்று தான் நல்ல ஆட்சி இருக்கும் போது ஒரு கெட்ட ஆட்சி வந்தா தான் நல்ல ஆட்சியின் அருமை தெரியும். அதற்காக அவ்வப்போது திமுகவை மக்கள் ஆட்சியில் அமர வைக்கின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றியது. விடியல் ஆட்சி என்று கூறும் திமுக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா?

தமிழக மக்கள் நன்றியுள்ள மக்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவி வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது. மக்கள் விரும்பவில்லை என்பதால் நிறுத்தி விட்டதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கம் மற்றும் பணத்தினை உயர்த்தி வழங்குவதாக கூறியிருந்தனர். ஆனால் அதை செய்யவில்லை. தாலி கொடுத்தது அதிமுக - தாலியை அறுத்தது திமுக என்றும் தாலி இங்கே? தங்கம் எங்கே? என்று பேசி ஓட்டு வாங்கிய திமுக தான் இன்றைக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details