ராணுவ முத்திரையுடன் போலி அரசாணை! தேனி எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! - ARMY JOB SCAM
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய தேனியைச் சேர்ந்த நபர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
![ராணுவ முத்திரையுடன் போலி அரசாணை! தேனி எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/1200-675-23484535-thumbnail-16x9-theni-aspera.jpg)
Published : Feb 6, 2025, 1:43 PM IST
தேனி:தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரின் கணவர் உயிரிழந்த நிலையில் விவசாயம் செய்து தனது மகனுடன் வசித்து வருகிறார். தனது தோட்டத்தில் விளையும் பொருட்களை அதே பகுதியை சேர்ந்த சசி என்பவரின் கடையில் கடந்த எட்டு ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரத்தினம் மகன் வெங்கடேஷுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படும் என சசி கூறியுள்ளார். ரூ.20 லட்சம் பெரிய தொகை என்பதால் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாது என ரத்தினம் மறுத்துள்ளார். இதனை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்தினத்தை அணுகிய சசி, தன் அக்கா மகனுக்கும் இதே போல் ராணுவத்தில் வேலை வாங்கித் தந்ததாகவும் அதற்கான ராணுவ முத்திரை கொண்ட அரசாணையை காட்டியுள்ளார்.
இதனால் தன் மகனுக்கும் அந்த வேலை கிடைக்கும் என நம்பி சிறுக சிறுக 11 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். மேலும் பணி கிடைக்க அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டும் என்பதால் வெங்கடேஷ் பார்த்து வந்த தனியார் வங்கி வேலையிலிருந்து விலக கூறியுள்ளார். இதனால் தான் பார்த்து வந்த வேலையும் விட்டுள்ளார் வெங்கடேஷ்.
இதனையடுத்து ஊட்டி ரெஜின்மென்டில் வேலைக்கான அரசாணையை கோயம்புத்தூரில் செல்வம் என்பவரிடம் சென்று பெற்றுக் கொள்ள கூறி அதற்காக அவரது வங்கிக் கணக்கில் 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ரத்தினத்திடம் சசி கூறியுள்ளார். இதனையடுத்து வெங்கடேஷ்க்கு ராணுவ முத்திரையுடன் கூடிய அரசாணையை வழங்கி உள்ளனர்.
பின்னர் டெல்லி செல்ல வேண்டும் எனக் கூறி வெங்கடேசை அழைத்துச் சென்று டெல்லியில் ஆறு மாத காலமாக விடுதியில் தங்க வைத்துள்ளனர் . அவருடன் கூடலூர் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் வேலைக்காக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சசி, ரத்தினத்திடம் உங்களிடம் சொன்னது போல் உங்கள் மகனை வேலைக்கு அனுப்பி விட்டேன். மேலும் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரத்தினத்திடமிருந்த 11 சவரன் தங்க நகையை பெற்றுள்ளார். இந்நிலையில் ஆறு மாதமாக டெல்லியில் உணவிற்கு மிகவும் சிரமப்பட்டு இருந்து வந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தனது ஊருக்கு திரும்பியுள்ளார் வெங்கடேஷ்.
பின்னர் வேலை வேண்டாம் நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி கொடுங்கள் என கேட்ட போது பணத்தை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ரத்தினம் மற்றும் கூடலூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.
பணிபுரிந்த வங்கியின் வேலையும் விட்டுவிட்டு தற்போது தனது மகனின் திருமணம் தடைப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தனது பணத்தை பெற்றுத்தர கோரி கோரிக்கை வைத்துள்ளார் ரத்தினம்.
மேலும் கூடலூர் பகுதி சேர்ந்த அருண்பாண்டி என்பவரிடமும் வேலை வாங்கித் தருவதாக 10.5 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும் தன்னை போல் பல பேரிடம் இது போல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இது குறித்து தேனி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்