சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2023ம் ஆண்டு பொதுத்தேர்வு வரையில், அவர்கள் சரியாக தேர்வெழுதி இருந்தும் விடைக்கான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ள முடியாது. தங்களுக்கு மதிப்பெண் அதிகமாக வரும் என நம்பிக்கை இருந்தால், மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு மட்டும் லிண்ணப்பிக்க முடியும் என்ற நிலைதான் இருந்தது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 1982ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள் மறுகூட்டல் கேட்பவர்களுக்கு அதனை மறுகூட்டல் செய்து முடிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் மேல்நிலை வகுப்பு (12ஆம் வகுப்பு) மாணவர்களின் விடைத்தாள் நகல்களை வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, துணைத்தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்தும், அதில் அளிக்கப்படும் மதிப்பெண்களில் சிலர் திருப்தி இல்லாமல் இருக்கின்றனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போதும், விடைத்தாள்களை ஆய்வு மேற்கொள்ளும்போதும், விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டிற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், விடைத்தாள் ஸ்கேன் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான அரசாணை இல்லாமல் இருந்ததால் அரசுத் தேர்வுத் துறையால் இதற்கு அனுமதி அளிக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய அனுமதி வழங்கி 2023 நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அதில், மேல்நிலைத் தேர்வுகளுக்கான (11, 12ஆம் வகுப்பு) விடைத்தாளின் நகல்கள் வழங்குவது போலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மேற்கொள்வது போன்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, துணைத்தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாளின் நகலை (ஜெராக்ஸ்) பெறலாம் எனவும், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.