சேலம்:செட்டிச்சாவடி மற்றும் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஆகிய பல்வேறு ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியோடு இணைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதிகளின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் குடியரசு தினமான நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைக்கும் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் தங்களது எதிர்ப்பை பொதுமக்கள் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் ரத்தாகிவிடும் , கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒன்று திரண்டனர். தொடர்ந்து செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இந்த தகவல் அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார். அவர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரை சந்திக்க முயன்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் சட்டப்பேரவை உறுப்பினரையும் பொது மக்களையும் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.