தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் சரபேஸ்வரர் ஸ்தலமாக அமைந்துள்ள ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் 3ஆம் குலோத்துங்கச் சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தரிசனம் செய்தார்.
இந்நிலையில், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் இராம நிரஞ்சன் மற்றும் சிவசேனா மாநில துணைத் தலைவர் பூக்கடை ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த கோயில் நிர்வாகம் மேல் ஊழல் புகார்களை அடுக்கிய மனு ஒன்றை இன்று தமிழக முதல்வர், தருமபுர குருமகா சன்னிதானம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோருக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வாயிலாக, நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ‘சரபேஸ்வரர் திருக்கோயிலில் நாள்தோறும் முறையான 6 கால பூஜைகளுக்குப் பதிலாக 4 கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. ஆனால், பரிகார ஹோமங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை வசூல் செய்யப்படும் நிலையில், இதற்கு திருக்கோயில் சார்பில் ரூபாய் 6 ஆயிரம் மட்டும் ரசீது வழங்கப்படுகிறது.
மேலும், சுவாமி நெய்வேத்தியத்திற்கு கோயில் மடப்பள்ளியில் பிரசாதங்கள் தயார் செய்யப்படாமல் வெளியே தனியார் உணவகத்தில் தயார் செய்யப்படும் நெய்வேத்தியம் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாள்தோறும் செய்யப்படும் அபிஷேகங்கள் முழுமையாகச் செய்யாமல், 16 விதமான சோடச உபசாரங்கள், கோபுர ஆர்த்தி காட்டாமலேயே பூஜைகள் நடைபெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்து.