சென்னை:தமிழ்நாட்டில் 2023 - 24ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது, வெயிலின் தாக்கம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், 2024 - 25ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் துவங்கியது. மாணவர்களுக்கு பள்ளி திறந்த அன்றே பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய உடன் பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்பும் முறையும் முதல்முறையாக செய்யப்பட உள்ளது.
மாணவர்களின் செயல்பாடுகளையும், பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களையும் பெற்றோருக்கு தெரிவிக்க வாட்ஸ்அப் (Whatsapp) மூலமும் அறிவுறுத்தப்பட உள்ளது. அதன் மூலம் அனைத்து பெற்றோருக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் தெரியும். பள்ளிகளை திறப்பதற்கு முன்னர் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.