தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக பத்து வேலை நாட்கள்.. முழு விவரம் இதோ! - School Calendar 2024 to 2025 - SCHOOL CALENDAR 2024 TO 2025

TN School Education Department: 2024 -25ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், நடப்பாண்டிற்கான நாட்காட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நாட்காட்டி புகைப்படம்
நாட்காட்டி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர், நாளை 2024 -25ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்தாண்டில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி நாட்காட்டியில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலை நாட்கள் கடந்த ஆண்டு 210 நாட்கள் என்பதை, இந்த ஆண்டு கூடுதலாக 10 வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, அதில் உள்ள வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதலும், மாணவரின் வாசிப்புத் திறன், பேச்சுத்திறனை அதிகரிக்கும் வகையில் மொழி ஆய்வகத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வாரத்தில் 4 நாட்கள் கம்ப்யூட்டர் ஆய்வகத்திற்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் ஆய்வகங்களின் மூலமாக நடைபெறும் எனவும், அதற்கான பயிற்சிகள் நடைபெறும் நாட்களும் முன்கூட்டியே வரையறை செய்யப்பட்டுள்ளது. தைத்திருநாள் பொங்கல் விடுமுறை ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகின்ற நிலையில், 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டால் பொங்கல் விடுமுறையாக 6 நாட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது இந்த கல்வியாண்டில் நீண்ட விடுமுறையாக இருக்கலாம்.

அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை விடுமுறை என்ற நிலையில், அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டால் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் 1 மணி 20 நிமிடம் வரை நூலக வகுப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி மற்றும் கல்விசாரா செயல்பாடுகளுக்கு ஐந்து பாடவேளை வாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாரத்திற்கு இரண்டு பாட வேளைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விசாரா செயல்பாடுகளான இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலையும் கைவண்ணமும், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு, தனித்திறன் பயிற்சி உள்ளிட்ட கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்தில் 16 பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், முதல் பருவத்தேர்வு அல்லது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், காலாண்டு விடுமுறை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத் தேர்வுகள் அல்லது அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 முதல் 23 வரை முடிந்த பின்னர், டிசம்பர் 24 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் பருவத்திற்கான வகுப்புகள் துவக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 6 முதல் 10, 11, 12ஆம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வும், ஜனவரி 29 முதல் 10, 11, 12ஆம் வகுப்பிற்கு இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஷாக்.. இதெல்லாம் செய்தால் மதிப்பெண்கள் கட்! - TNPSC Group 4

ABOUT THE AUTHOR

...view details