சென்னை:பள்ளி வாகனங்களில் செல்லும் ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு போஸ்கோ (POCSO) சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும், பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட பல பாதுபாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தற்போது, தனியார் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கையை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், "பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து இருப்பிடத்திற்கும் அழைத்துச் செல்ல பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்காக நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமீப காலங்களில் பள்ளி வாகனங்களில் நடத்துநர்களால் மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளி வாகங்களுக்கான நெறிமுறைகள்:
- தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்கள் மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012 பிரிவு 5(6)-ன்படி மாணவியர்களுக்கு இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதாவது, அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.
- பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுநரின் உரிமத்தினைப் பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து, அவை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.
- பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் நியமனத்தின் போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்று சமர்பிக்க வேண்டும். சார்ந்த மருத்துவரிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- பள்ளி வாகன உதவியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட 1 மாத காலத்திற்குள் போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் உதவியாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், 3 மாதத்திற்கு ஒருமுறை ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- இந்த பயிற்சியின் போது, போக்சோ (POCSO) சட்டம் குறித்து தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
- வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தினமும் சுவாச சோதனை (Breath Analysis) மேற்கொள்ளப் பட வேண்டும்.
- அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி (GPS) மற்றும் சிசிடிவி (CCTV) கேமரா கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும். சிசிடிவி தரவுகள் அனைத்தும் குறைந்த பட்சம் 6 மாதம் காலம் பாரமரிக்கப்பட்டு, பின்னர் காவல் துறையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- போக்குவரத்துத் துறையிடமிருந்து பள்ளி வாகனம் என்பதற்கான அனுமதி (School Permit) பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் தரச்சான்று (Fitness Certificate) உரிய காலத்தில் புதுப்பிக்கப் படவேண்டும்.
- ஒவ்வொரு பள்ளி வாகனமும் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வாகனத்தின் முன்னும், பின்னும் "பள்ளி வாகனம்" என பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் முதலுதவிப்பெட்டி கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்புக் கருவி உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த பள்ளியின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வகையில் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.
- புத்தகப் பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின் அடியில் போதிய இடவசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- ஒவ்வொரு வாகனத்திலும் விதிகளின்படி, அவசரகால வழி இருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- பள்ளி வாகனத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களில் இடையே Guarding Sheets கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்
- பள்ளி வாகன ஜன்னல்களில் துணியிலான திரைகள் அல்லது வண்ண மயமான காதிக ஒட்டிகளை ஒட்டக் கூடாது.
- காலாவதியான வாகனங்களைப் (Condemned Vehicles) பள்ளி வாகனங்களாகப் பயன்படுத்தக் கூடாது.
- அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள அவசர கால பொத்தான் (Panic Buttons) பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும்.
- பள்ளி வாகன உட்புறத்தில் எளிதில் மாணவர்களின் பார்வையில் தெரியும் வகையில் அவசர கால உதவி எண்களான '14417' மற்றும் '1098' குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது.
- பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏறும் போதும், பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகள் இறங்கிச் செல்லும் போதும் வாகனத்திற்கு அருகிலோ, பின்புறமோ குழுந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனம் இயக்கப்பட வேண்டும்.
- பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளை அவர்களது இருப்பிடத்தில் இறக்கிவிடும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே அங்கிருந்து வாகனத்தை இயக்க வேண்டும்.
- மாணவர் மனசு புகார் பெட்டியில் மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்த பள்ளி முதல்வர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் பாதுகாப்பு குழுவைச் (SSAC) சேர்ந்த 2 நபர்களூடன் இப்புகார் பெட்டியில் பெறப்படும் புகார்களின் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பள்ளி வாகனங்களில் செல்லும் மாவணவர்களுக்கு வாரம் ஒருமுறை சாரண சாரணியர் அமைப்புகளில் உள்ள பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி மாணவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறவேண்டும். அக்கூட்டத்தில் பாலியல் குற்றங்கள் (Sexual harassment) மட்டுமின்றி வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது, வாகனம் ஓட்டும் போது செல்பேசி பயன்படுத்துவது, தவறான வழியில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தில் புகைபிடித்தல் போன்ற நிகழ்வுகள் குறித்தும் கேட்கப்பட்டு, தொடர் நடவடிக்கைக்காக பள்ளி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
- தனியார் பள்ளிகளில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் குறித்த விபரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இது தான் நடந்தது - ரகசியத்தைப் போட்டு உடைத்த அன்புமணி! - Lok Sabha Elections 2024