தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகை 2024; அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தீபாவளி கோப்பு படம், அரசியல் தலைவர்கள்
தீபாவளி கோப்பு படம், அரசியல் தலைவர்கள் (Credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் வாழ்த்து: அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது.

மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி. தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும்.

ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் படுதோல்வி அடைந்துள்ளது. விளைவித்த பயிர்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் கொண்டாட்ட மனநிலையில் திளைக்க வேண்டிய மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்கி நிம்மதியை அளிக்க வேண்டிய அடிப்படைக்கடமையைக் கூட அரசு செய்யவில்லை.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, இளைஞர் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் என அனைத்துத் துறைகளிலும் இருள் தான் சூழ்ந்திருக்கிறது. வண்ண ஒளிகளின் திருவிழா, மத்தாப்புகளின் திருவிழா என ஒருபுறம் தீபஒளித் திருநாளை வர்ணித்தாலும் மக்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது. இந்த இருள் அகற்றப்பட்டு உண்மையான வெளிச்சம் பிறக்கும் போது தான் தீபஒளி அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருளை பழித்துக் கொண்டு மட்டும் இருப்பதில் பயனில்லை. அதை அகற்றி ஒளியேற்ற வேண்டும். அந்த ஒளியால் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட ஜொலிக்கவும், மக்களின் வாழ்வில் இல்லாமை என்பதே இல்லாததாகி, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க தீப ஒளி வகை செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்வாழ்த்து:இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை. அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும். தீப ஒளியின் மகிழ்ச்சி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது.

ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைப்பதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆட்சியாளர்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்றால், அதை சாத்தியமாக்கும் திறன் யாருக்கு இருக்கிறதோ, அவர்களை ஆட்சியாளர்களாக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும். போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜி.கே. வாசன்வாழ்த்து:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களும், நாடும் முன்னேற இயற்கையையும், இறைவனையும் தீப ஒளியேற்றி வழிபடுவோம், தீமை அகன்று நன்மை பெருகட்டும். தீபாவளித் திருநாள் தமிழர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்வழி காட்டி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஒளி ஏற்படுத்தட்டும். தீபாவளி நாளை ஒட்டி மக்கள் புத்தாடை அணிவதும், இறைவனை வழிபடுவதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் பரிமாறுவதும், உதவிகள் செய்வதும் மகிழ்ச்சிக்குரியது.

கடந்த கால சிரமங்கள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் தொடராமல் இருக்க வரும்காலம் புதுப்பொலிவுடன் இருக்கும் வகையில் தீபாவளித் திருநாள் அமைய வேண்டும். தீய எண்ணங்கள் மறைய, நல்லெண்ணம் மேலோங்க தீபாவளி வழிகாட்டட்டும். மத்திய மாநில அரசுகள் தீபாவளியை ஒட்டி நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று அறிவித்து தீபாவளி நாளில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து வரும் நாட்களில் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மத்திய அரசு மாநில மக்களின் வளர்ச்சிக்கும், விவசாய மேம்பாட்டிற்கும் ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள் போல மேலும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவரும் ஒற்றுமை, அன்பு, நட்பு, உதவி ஆகியவற்றை கடைபிடித்து மாநிலங்களை மேம்படுத்தவும், நாட்டை பாதுகாக்கவும் துணை நிற்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தீபாவளியை ஒட்டி கடைபிடிக்க வேண்டிய விதிகளை கடைபிடிப்போம்.

தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து: பமுன்னாள் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் “தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தி. இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது.

சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் சுய சார்பு இந்தியா கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்குக் கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை வாழ்த்து:காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பா.ஜ.க.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது.

தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம். பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்கள் தனியாருக்கு டெண்டர்; அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனமுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும், அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு கடைகளிலும் பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் வாழ்த்து:அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details