சென்னை: 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள 500மிலி நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற (Green Magic) பால் பாக்கெட்டில் பாலின் அளவை 450 மிலி ஆக குறைத்து, Green Magic Plus என பெயர் மாற்றம் செய்து ரூ.25க்கு விற்பதோடு, அதன் விலையை லிட்டருக்கு ரூ.11 ஆவின் உயர்த்த உள்ளதாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சு.ஆ பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் 4.5 சதவீத கொழுப்பு சத்தும், 8.5 சதவீத திடசத்தும் கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் "Green Magic" எனும் பெயரில் 22 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.
ஆனால் "Green Magic" என்பதை "Green Magic Plus" என பெயரில் சிறு மாற்றம் செய்து, அதே 4.5 சதவீத கொழுப்பு சத்தோடு 8.5 சதவீத திடசத்தில் கூடுதலாக அரை சதவிகிதம் (0.5 சதவீதம்) மட்டும் சேர்த்து 9.0 சதவீத திடசத்தும், அதோடு வைட்டமின் ஏ மற்றும் பி சத்துக்கள் செரிவூட்டியும் 25 ரூபாய் விற்பனை விலை கொண்ட 450மிலி பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டும் இதே போல் நடந்தது.
இதற்கு, பாமக தலைவர்அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு, ஆவின் நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸ் அவர்களின் தரப்பிலிருந்து உண்மையை மறைக்கும் வகையில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாக்கெட் பால் விலை உயர்வா? ஆவின் நிறுவனம் விளக்கம்!
அந்த அறிக்கையில், புதிய வகை ஆவின் பாலின் விற்பனையை இதுவரை தொடங்கவில்லை என்பது மட்டும் தான் உண்மை. மீதியுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையை மறைத்தும், பொய்யை மட்டுமே உண்மை போலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிர்வாகத்தின் விற்பனை பிரிவு உதவிப்பொது மேலாளர் கடிதத்தில் சோதனை அடிப்படையில் வைட்டமின் 'ஏ' மற்றும் 'டி' சத்துக்கள் வலுவூட்டப்பட்ட 4.5 சதவீத கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீத திடசத்தும் கொண்ட புதிய வகை கிரீன் மேஜிக் பிளஸ் 450 மில்லி பேக்கை சென்னை மாநகரில் அறிமுகப்படுத்த இணையம் முடிவு செய்துள்ளனர். இது ஏமாற்றும் வேலை.
ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் வகை பால் அறிமுகத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை அரங்கேற்ற திட்டமிடுதல் பிரிவு அதிகாரிகள் திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஏனெனில் ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் எனும் புதிய வகை பாலினை சென்னையில் உள்ள மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்யாமல், பெரம்பலூர் மாவட்டம், பாடலூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து தினசரி 20ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்து சென்னைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பது ஊழல் முறைகேடுகள் செய்வதற்குத் தான் என்கின்றனர் விபரம் அறிந்த ஆவின் ஊழியர்கள்.
இதில், சுழற்சி முறையில் நான்கு கண்டெய்னர் லாரிகளுக்கு ஒரு ஒப்பந்ததாரர் என மொத்தம் நான்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. வெறும் 20ஆயிரம் லிட்டர் ஆவின் கிரீன் மேஜிக் ப்ளஸ் வகை பாலினை பாடலூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல இவ்வளவு செலவு செய்தால் புதிய வகை பால் விற்பனை மூலம் வருவாய் கிடைக்காமல், பேரிழப்பு தான் நடக்கும். இதனால் ஊழல் அதிகாரிகளின் கஜானா நிறையுமே தவிர ஆவின் திவாலாகி விடும் என ஆவின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஆவினில் புதிய வகை பாலினை அறிமுகம் செய்வதாக இருந்தால், பச்சை நிற பாக்கெட்டில் இல்லாமல், கிரீன் மேஜிக் ப்ளஸ் எனும் பெயரில்லாமல் வேறு வண்ணத்தில், மற்றொரு பெயரில் கூடுதல் சத்துக்களுடன் அறிமுகம் செய்யட்டும். புதிய வகை பாலினை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகம் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பால் முகவர்களை நிர்பந்தம் செய்யாமல், களத்திற்கு வந்து ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்