மதுரை:மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ஒருவரின் ஒரு வயது குழந்தை தொடர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் மூச்சு குழாயில் ஏதோ ஒரு புறப்பொருள் இருப்பதை கண்டறிந்தனர்.
அது குழந்தை விழுங்கிய எல்இடி பல்ப் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக அகற்றினர். இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் கூறுகையில், "மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி அன்று ஒரு வயது பெண் குழந்தை சுமார் ஏழு நாட்களாக தொடர் இருமல் மற்றும் காய்ச்சலுக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அக்குழந்தையின் பெற்றோர் குழந்தை எந்த பொருளையும் விழுங்கவில்லை என்றனர். அக்குழந்தையின் எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் ஊக்கு மாதிரியான புறப்பொருள் (Foreign Body) மூச்சுக் குழாயின் இடது புறத்தில் கண்டறியப்பட்டது.
அரசு இராசாசி மருத்துவமனையின் மயக்கவியல் துறை இயக்குநர் பேராசிரியர். கல்யாணசுந்தரம் தலைமையிலான மயக்கவியல் மருத்துவர்கள் குழு மற்றும் நெஞ்சகநோய் மருத்துவ துறைத் தலைவர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் மீனாட்சி சுந்தரி உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி அன்று மூச்சு குழாய் உள்நோக்கி பரிசோதனை கருவி (Paediatric Bronchoscope) செலுத்தி பரிசோதித்ததில் LED பல்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மருத்துவர்கள் இணைந்து மேற்கொண்ட இரண்டு மணி நேர தீவிர முயற்சிக்குப் பின் வெற்றிகரமாக அந்த எல்இடி பல்பு அகற்றப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவ கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.
சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில், "சிறு குழந்தைள் உள்ள குடும்பங்கள் குழந்தைகளின் கைகளில் உள்ள பொருட்களை அல்லது விளையாட்டு சாமான்களை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். அதில் உள்ள நுண்ணிய பொருட்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்" என அறிவுறுத்தியுள்ளனர்.