தூத்துக்குடி:விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றிருப்பதாகவும், இதனைக் கேட்டால் படிக்க விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுங்கள் என்று கழகத்தின் முதல்வர் மிரட்டுவதாகக் கூறி, தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் இன்று கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி, கடற்கரை சாலையில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகம் இயங்கி வருகிறது. இப்பயிற்சிக் கழகத்தில் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வணிக கப்பலில் பணியாற்றக்கூடிய வகையில், ஆறு மாத பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். வருகிற டிசம்பர் மாத இறுதியில் இவர்களின் பயிற்சி முடிவடைகிறது.
பயிற்சி மாணவர் ராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விடுதியில் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாகக் கூறி மாணவர்கள் உணவு அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று திடீரென்று தூத்துக்குடி கடற்கரை சாலையில் 40 மாணவர்கள் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை; கைது செய்யப்பட்ட இருவருக்கு கை, கால் முறிவு!
இது குறித்து பயிற்சி மாணவர் ராஜ் கூறுகையில், “தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழக விடுதியில் தங்கி 40 பேர் பயிற்சி பெற்று வருகிறோம். 6 மாதத்திற்கு உணவிற்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளோம். ஆனால், அவர்கள் கூறியபடி உணவு வகைகள் வழங்கவில்லை. மெனுவில் இல்லாத தரமற்ற உணவினை வழங்குகின்றனர்.
இது குறித்து புகார் தெரிவித்த நிலையில், விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுங்கள். உங்களது படிப்பு முடிந்தவுடன் நான் தான் உங்கள் அனைவருக்கும் கையெழுத்து வழங்க வேண்டும். அதனால், கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுங்கள் என்று மிரட்டுகின்றனர். ஆனால், இந்த உணவை சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உருவாகிறது.
இதற்கு முழு காரணம் கழகத்தின் முதல்வர். மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டணத்தை விட கூடுதலாக ரூ.4 ஆயிரம் மற்றும் குடி தண்ணிற்காக ரூ.700 வசூலிக்கப்படுகிறது. இதற்கு எதற்கும் ரசீது மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆகவே, 40 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தின் முதல்வர் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்