தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“குளறுபடிகள் நிரம்பிய நீட் தேர்வு தேவையா?” - அமைச்சர் ரகுபதி கேள்வி! - law minister in Law university

MINISTER RAGUPATHY ON NEET: "நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் தமிழகத்தின் கேள்வி" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 9:05 PM IST

சென்னை:தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வியாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டத்துறை அரசு செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், கர்னல் பேராசிரியர் டாக்டர் என்.எஸ்.சந்தோஷ் குமார், துணைவேந்தர் தண்டலு, பதிவாளர் கௌரி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 23 அரசு சட்டக்கல்லூரியில் உள்ளது. அதில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு 7052 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 182 பேர் நிராகரிக்கப்பட்டு, 6860 பேர் தகுதி உடையவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 624 பேருக்கு இந்த ஆண்டு சட்டப் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் விண்ணப்பங்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் கல்லூரியில் சேர்க்கப்படுகிறது. இதில் முதல் 24 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர்:இந்த விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சட்டக்கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு சட்ட கல்லூரிதான். இதனை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆணை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

குளறுபாடுகள் நிறைந்த நீட் தேர்வு:அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு குளறுபடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி இன்றைக்கு கூட 1,526 மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் கருணை மதிப்பெண் போட்டுள்ளனர். மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இப்படி பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே இந்த நீட் தேர்வு தேவையா என்பது தான் தமிழகத்தின் கேள்வி. யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு நீட் தேர்வு வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை, எங்களுக்கு விலக்கு கொடுங்கள், அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு வரும்போது சட்டத்துறை மட்டும் அல்லாமல், மக்கள் நல்வாழ்வுத் துறையும் தமிழகத்தில் நீட் தேர்வின் அதிர்வலைகளைச் சுட்டிக்காட்டும். தமிழ்நாட்டின் முதல்வர் சொன்னது போல நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்கள் ஆட்சியின் லட்சியம் எனக் கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்ற கூட்டம் குறித்துக் கேட்ட கேள்விக்கு சட்டமன்றம் கூடும்போது முக்கியமான பில் வரலாம், வராமலும் போகலாம் அது குறித்து முன்னதாக சொன்னால் சுவாரசியம் இல்லை என்றார். மேலும் அமித்ஷா தமிழிசையைக் கண்டித்தது குறித்துக் கேட்டபோது மற்றொரு கட்சி விவகாரத்தில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.

ஆனால் ஒன்று தமிழர்கள் எங்கு அவமதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக வருத்தப்படுபவர்களும், குரல் கொடுக்கக் கூடியவர்களும் நாங்கள்தான். உலக தமிழர்கள் எங்கேயும் அவமதிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தால் நாங்கள் நிச்சயமாகக் கண்டிப்போம். இது அவர்களது உட்கட்சி விவகாரம், வெளிப்படையான கருத்து தெரியாத வரைக்கும் நாங்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது எனக் கூறினார்.

இதையும் படிங்க:காலம் உள்ள வரை கலைஞர்' கண்காட்சியகம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசிட்

ABOUT THE AUTHOR

...view details