மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (மே 14) தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை செயலர் சி.உமாசங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா முன்னிலையில், "வாருங்கள் அனைவரும் தொழில் முனைவோர் ஆகலாம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII TN) மற்றும் இடிஐ இந்தியா (Entrepreneurship Development and Innovation Institute - India) நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு (P.G Diploma in Entrepreneurship and Innovation) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை செயலர் சி.உமாசங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, "தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 2001ஆம் ஆண்டு சிறு/குறு தொழில்துறை நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் நோக்கம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் கண்டுபிடிக்கும் பொருள்களின் மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாக்குவது ஆகும். இந்நிறுவனத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவ, மாணயர்களுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்காக வருடந்தோறும் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் தற்போது 1714 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்நிறுவனங்கள் தற்போது தனியாக பயிற்சி வழங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளன. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமையிடம் அகமதாபாத் ஆகும். இந்நிறுவனம் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ், இடிஐ இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு 500 மாணவ, மாணவியர்களை வைத்து ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு பயிற்சி (Entrepreneurship Development and Innovation Training) வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவியர்களை வைத்து நடத்தப்படும் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர்க்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.