சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை (7 ஹெக்டேர் நிலத்தை) ஐ.ஜி- 3 இன்போ நிறுவனத்துக்கு ஒதுக்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், துணை போன அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கலாமின் அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த நிலத்தை அடைமானம் வைத்து ஆக்ஸிஸ் வங்கியிடம் இருந்து 1,350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சித்து வருவதால், அந்த நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போலி ஆவணங்கள் உருவாக்கி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டவிரோதமாக எவருக்கேனும் ஒதுக்கப்பட்டுள்ளதா, அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, மனுதாரர் அந்த குழுவை அணுகலாம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரும் இக்குழுவை அணுகலாம் எனவும், அவரது புகாரை குழு தகுதி அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்!