தருமபுரி: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகாவிடம் உரிய தண்ணீரைப் பெற்று தரவும், மேகதாட்டு அணை கட்டுமானப் பணியை சட்டப்படி நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி, பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி ஜூன் 10ஆம் தேதி பூம்புகாரில் தொடங்கினர்.
இந்த பேரணி பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை சென்று நிறைவு பெறுகிறது. தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக நேற்றிரவு ஒகேனக்கல் வந்தடைந்தனர். இன்று காலை ஒகேனக்கலில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி தொடங்கியது.
இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று முடிவுற்றது. தொடர்ந்து, விவசாயிகள் மத்தியில் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், "மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடுகின்ற விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட மோடியை, நீங்கள் இந்தியாவை ஆட்சி செய்ய தகுதியற்றவர் என்ற தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.
மேகதாட்டில் அணை கட்டினால் அந்தப் பகுதியில் உள்ள கனகபுர மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும். மேலும், நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரின் தம்பி ரவியை மக்கள் தோற்கடித்துள்ளனர்.
அதேபோல தான், தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல், விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து வரும் நிலையில், திராவிட மாடல் ஆட்சி செய்யும், டெல்டாவுக்கு சொந்தக்காரர் எனக் கூறும் ஸ்டாலினுக்கும் இந்த நிலைமை வரும்" என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “டெல்டா, சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி நீர் தான். ஆனால், இன்று அது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காவிரியில் உபரி நீரைத் தடுத்து ராசி மணலில் அணைக்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.