தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்; “உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது” - அரசுத் தரப்பு வாதம்! - Gutka Inside TN Assembly - GUTKA INSIDE TN ASSEMBLY

Gutka inside TN Assembly: முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 9:37 PM IST

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2017ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் அந்த நோட்டீஸ் காலாவதியாகி விட்டதாக கூறினார். இந்நிலையில், முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்; "மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவது நியாயமற்றது"- உயர் நீதிமன்றம் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details