சென்னை: சமூக ஆர்வலரான முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக யூடியூபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் யூடியூபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக மாநில அரசு காவல்துறையைப் பயன்படுத்தி கைது நடவடிக்கை மற்றும் குண்டர் சட்டம் மூலம் ஒடுக்கி வருகிறது.
பெரும்பாலான சட்டவிரோத செயல்களை பத்திரிகைகள் வெளியிட தயக்கம் காட்டும் நிலையில், அதை யூடியூபர்கள் வெளியிடுவதால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அதனால் கைது நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் யூடியூபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்தி விரைவாக வழக்கை விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்காது. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவதூறான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:"கேள்வியில் உள்நோக்கம் உள்ளது"- பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்!