சென்னை:2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்த வேண்டும்.
இதையும் படிங்க:ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
இதற்காக, ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், ஜனவரி முதல் மார்ச் வரை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது.
மேலும், பள்ளிகளின் வசதிக்கேற்ற பெற்றோர்கள், பொது மக்களின் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கொண்டு சிறப்பாக பள்ளி ஆண்டு விழா நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்”இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.