தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டமன்ற சம்பவம்: 'முதல்வருக்கு இவ்வளவு ஆணவம் ஆகாது'.. ஆளுநர் ரவி எச்சரிக்கை! - TN GOVERNOR RN RAVI

முதல்வருக்கு இத்தகைய ஆவணம் நல்லதல்ல என்று ஆளுநர் ரவி காட்டமாக கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலின் தொடர்ச்சியாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 7:57 PM IST

சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இத்தகைய ஆவணம் நல்லதல்ல என்று ஆளுநர் ரவி காட்டமாக கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலை, மையமாக கொண்டு ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'திரு.@mkstalin அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.

இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்.' என்று ஆளுநர் ரவி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (ஜன.11), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட பதிலுரை ஆற்றினார். அப்போது, "தலைவர் கலைஞர் அவர்கள் ‘பராசக்தி’ படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார், ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’. அதேபோல் இந்தச் சட்டமன்றமும், ஆளுநரைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைத்தான் காண்கிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வருகிறார், உரையாற்ற வருகிறார். ஆனால், உரையாற்றாமலேயே சென்றுவிடுகிறார்.

அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ளபடி, ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதிமீறல் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார்." என்று குறிப்பிட்டு பேசினார்.

ஆளுநரின் அவை நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி அளிக்கும் விதத்தில் ஆளுநர் மாளிகை இன்று இவ்வாறு காட்டமாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு முன்னதாக தமிழ்தாய் வாழ்த்து பாடியதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவை மரபுப்படி இக்கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் கூறினார். இதனால், பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி, தமது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையை விட்டு வெளியேறினார்.

ABOUT THE AUTHOR

...view details