கோயம்புத்தூர்: கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மாகாஷங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் ‘புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் நாட்டின் பாரம்பரியத்தோடு சேர்ந்த கல்வி முறை குறித்த கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இந்நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் நமது அறிவு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியம். இதற்கு நமது தேசிய கல்விக் கொள்கையானது வழிவகுக்கிறது.
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் உலகின் தலைசிறந்த நாடாக இருந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு பிறகும், இந்தியா விடுதலை அடைந்த பின்பும் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் தான் நாம் இருந்தோம். இதற்கு காரணம், மேற்கத்திய நாடுகளின் சிந்தனைகளின் தாக்கம் தான். பிரிட்டிஷ் நாட்டினர் நமது நாட்டை விட்டு வெளியேறிய போதும் காலனி நாடுகளின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் இருந்துள்ளது, அது கல்வியிலும் இருக்கிறது.
இதை மாற்றும் வகையில், தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு, நமது நாட்டின் பாரம்பரியமிக்க கல்வி முறை அதில் இருக்கிறது. பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி என்பது முக்கிய அம்சமாக இருந்த போதும், இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாச்சார பாரம்பரியம் அதன் ஆன்மாவாக உள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடத்தில் நாம் இருக்க வேண்டும். அதற்கு கல்வி மற்றும் இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம். மத்திய கல்வித்துறை Bhartiya knowledge system என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.