தேனி: முல்லைப் பெரியாறு அணை என்பது ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கக்கூடிய அணையாகும். இந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒவ்வொரு மழை பெய்யும் காலங்களில் கேரளாவில் விஷம பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள் சங்கம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்படி, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. இதனால், கேரள மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, உடனடியாக அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களில் கேரளாவில் உள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சமூக வலைதளங்களில் ஈடுபட்டு வருகிறது
ஆனால், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு உள்ளிட்டவை ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்தும் வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து, முல்லை பெரியாறு அணைத்து நீர்வரத்து அதிகரித்தவுடன், அங்குள்ள மக்களை பயமுறுத்தும் விதமாக, சில அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணை இடிய போகிறது என்று விஷம பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது, வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் முடிச்சு போட்டு பல்வேறு விஷம பிரச்சாரங்களை கேரளா சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அமைச்சரவையிலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வாதங்கள் முன்வைத்து பேசப்பட்டு வருகிறது.
இதனை தமிழக விவசாய சங்கங்கள் முற்றிலுமாக கண்டித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம், தமிழக கேரள எல்லை பகுதியான குமுளியை முற்றுகை இட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி, பெரியார், வைகை பாசன விவசாய சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சார்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட வந்தனர்.
அவர்களை லோயர் கேம்ப் (Lower Camp), முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களது மணிமண்டபம் முன்பாக காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, சென்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறியதால், விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் அப்பகுதியில் சாலையோரமாக நின்று, முல்லைப் பெரியாறு அணை குறித்த விஷம பிரச்சாரங்களை கேரளாவில் உள்ள அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், “ உடனடியாக கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து விஷம பிரச்சாரங்கள் மேற்கொள்ளுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை கேரளா அரசு மேற்கொள்ள வேண்டும். இது போன்ற விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்குரிய தீர்வு காண வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:உலக யானைகள் தினம்..யானைகளை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?