தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிறையிலிருந்தே கரூரை கைக்குள் வைத்துள்ள செந்தில் பாலாஜி' - முகிலன் பரபரப்பு பேச்சு - Senthilbalaji case

Allegation against V.Senthilbalaji: சிறையிலிருக்கும் செந்தில்பாலாஜி, அங்கிருந்தபடியே கரூர் மாவட்டத்தையே கட்டுப்படுத்துகிறார் எனவும், இதன் ஒருபகுதியாகவே ப்ளூ மெட்டல் கல் குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் சமூக ஆர்வலர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறையில் இருந்தாலும் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தை கைக்குள் வைத்துள்ளார்
செந்தில் பாலாஜி குறித்து முகிலன் பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 9:08 AM IST

முகிலன் பரபரப்பு பேச்சு

கரூர்: புகலூர் வட்டம் குப்பம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள அன்னை ப்ளூ மெட்டல் சாதாரண கல் குவாரி மற்றும் கிராவல் குவாரி குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம் அத்திப்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜன.30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர், வழக்கறிஞர் குணசேகரன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், "சட்டவிரோதமாக இயங்கிய, அன்னை கல் குவாரியை எதிர்த்து, அரசு அலுவலகங்களில் மனு கொடுத்து அரசு அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர், கல் குவாரியை எதிர்த்து மனு கொடுத்ததற்காக, விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்டவர் திமுகவின் கிளை செயலாளராக இருந்தபோதும் தமிழ்நாடு அரசும் இதுவரை எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை. காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு, அன்னை கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்ட குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த அன்னை கல்குவாரிக்கு தான், இன்று அரசு அனுமதியுடன் இயங்குவதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சிறையிலிருந்தாலும் கரூரை இயக்கும் செந்தில்பாலாஜி: இதன் பின்னணியில் சிறையில் இருந்தாலும் அமைச்சராக தொடர்ந்து வரும் செந்தில் பாலாஜி இருக்கிறார் என பகிரங்கமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டுகிறது. கடந்த ஜன.5ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி மிக அருகில் கல்குவாரி இயங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் அபாயம் உள்ளது. மேலும் ஏற்கனவே, 500 டன் அளவில் சட்ட விரோதமான வெடி மருந்துகளை பயன்படுத்தி கல்குவாரி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னை கல்குவாரி இயங்க அரசு அனுமதி அளித்தால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை கருத்து கேட்பு கூட்டத்தில், எதிர்ப்பு குரலாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளோம்.

சிறையில் இருந்தாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறார். அதன் எதிரொலி தான், அன்னை கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என பகிரங்கமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டுகிறது" எனத் தெரிவித்தார்.

கனிம கொள்ளை அமைச்சர் துரைமுருகன்? - முகிலன்:கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கரை வைத்து, ரூ.4,000 கோடி அளவுக்கு மணல் கொள்ளை அடித்த கும்பல் தான், தற்போது மாமுல் பெறுவதற்காக சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிக்கு அனுமதி கேட்பதற்காக கூட்டம் நடத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன் மட்டும் தான். அவர் கனிம வளத்துறை அமைச்சர் இல்லை கனிம கொள்ளை அமைச்சர் துரைமுருகன். சொந்த கட்சிக்காரன் சட்ட விரோத கல்குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு கூட கண்டனம் தெரிவிக்காத, திமுகவைச் சேர்ந்ந கனிமவளத்துறை அமைச்சர் தான் துரைமுருகன்.

மேலும் கல் குவாரிக்கான கருத்துக்கு கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்க கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினர், அச்சப்படும் சூழ்நிலை தான் நிலவுகிறது. நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறை, முக்கிய ஆவணங்களை குற்றவாளிகளுக்கு சாதகமாக இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளது. இதுகுறித்தும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்” என பேசினார்.

இதையும் படிங்க: "மின் விளக்கு, பஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லை" - கரூரில் ஆய்வுக்கு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவிடம் முறையிட்ட மாணவிகள்!

ABOUT THE AUTHOR

...view details