சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் முடிவுபெறும் தருவாயில் உள்ளது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, 7வது கட்ட வாக்குப்பதிவானது வருகிற ஜூன் 1ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாளை (மே 30), பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி நாளை (மே 30) கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1ஆம் தேதி வரை தியானத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை (மே 30) மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் கார் மூலமாக படகு தளத்துக்கு செல்கிறார்.
அங்கிருந்து தனி படகு மூலம் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்திற்கு பின்பு 1ஆம் தேதி படகு மூலம் கரை திரும்பும் பிரதமர் மோடி மாலை 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி செல்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகைதருவது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது 'X' வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தருமபுரம் ஆதீனம் விவகாரம்; 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு!