சென்னை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்திடும் வகையில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1998ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இதனிடையே, இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் ஈந்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் பெரும் தியாகத் தொண்டுகளைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17ஆம் தேதி தியாகிகள் தினம் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று தியாகிகள் தினத்தையொட்டி, காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டப முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்ற பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகரராஜா அசன் மௌலானா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.