நாகப்பட்டினம்:நாகப்பட்டினம், அபிராமி சன்னதி திடலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று(ஏப்.30) நடைபெற்றது. நீர் மோர்ப் பந்தலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திறந்து வைத்து பொதுமக்களுக்குப் பழவகைகள் மற்றும் மோர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,"பிரதமர் நரேந்திர மோடி முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் உண்மைக்குப் புறம்பான பொய்யும், புரட்டையும் பேசி வந்தார். இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியாகப் பேசினார். தற்போது மத ரீதியாகப் பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
பிரதமர் மோடி எப்படிப் பேசி குட்டிக்கரணம் அடித்தாலும், இந்திய மக்கள் அவரை புறக்கணிப்பார்கள். இந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு இடமில்லை. கடந்த 10 ஆண்டுகள் ஏமார்ந்தது போதும் என மோடியை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.