சென்னை:காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, வசந்தகுமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறுகையில், “தமிழக அரசை மத்திய அரசு தொடந்து புறக்கணித்து வருகிறது. நியாயமான விதத்தில் நிதியும் ஒதுக்கவில்லை. தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ரயில்வே துறையில் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சார்ந்த மாவட்ட, வட்டார தலைவர்கள் எல்லாம் மக்களிடம் கையேந்தி ஒரு ரூபாய் கூடுதலாக போட்டு ஆயிரத்து ஒரு ரூபாயை ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். தேர்தல் வரை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை ஏற்றாமல், தற்போது அனைத்து விலைகளையும் ஏற்றிவிட்டது. சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.
மகாராஷ்டிராவில் பல கோடி செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆறு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுந்திருக்கிறது, இதுதான் மோடி அரசின் இலட்சணம். இதுவரை சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது குறித்து மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.
மத்திய அரசு உலகத் தலைவர்களின் பெருமையை சிதைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடக்கும்போது, கருணாநிதி ஆட்சி நடக்கும் போது ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டு இருக்கிறது. அவை இன்று வரை எத்தனை சுனாமி, கடல் சீற்றம் வந்தாலும் இடிந்ததில்லை, எடுத்துக்காட்டு திருவள்ளுவர் சிலை.