சென்னை: தேர்தல் நேரத்தில் மாயை உருவாக்க உண்மைக்கு புறம்பான திட்டங்களை செயல்படுத்துவதுதான் பாஜகவின் வேலை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிப்பது குறித்து மல்லிகார்ஜூன கார்கேவைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் டெல்லி சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆலோசனை முடித்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லி பயணம் சென்றது, கட்சியின் கட்டமைப்புத் தேர்தல் பற்றிய கலந்தாய்வு குறித்து ஏற்கனவே முடிவு செய்த கூட்டம்.
தமிழகத்தில் ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறாக சித்தரித்து, தவறான கருத்துக்களை பதிவு செய்கிறது. அவர்களின் இஷ்டத்திற்கு அரசியல் நாகரிகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். யூகங்களின் அடிப்படையில், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்திகளை வெளியிட்டு, குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழாவிற்கு வராததற்கான காரணம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலமைச்சரிடமும், அமைச்சர்களிடமும் ஏற்கனவே பேசிவிட்டேன். டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் இருந்ததால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக டெல்லி செல்ல வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்க பாலு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்னும் ஓரிரண்டு நாட்களில் தேர்தல் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவோம்.