திருநெல்வேலி: தமிழகக் காங்கிரஸ் கமிட்டி சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சி தாய்க்குலம் என்ற அடிப்படையில் விஜயதாரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதாரணிக்கு முகவரியைக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிடச் செய்தது.
காங்கிரஸ் கட்சிக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டு, முழுக்க முழுக்க சுயநலத்தோடு பாஜகவில் இணைந்துள்ளார் விஜய்தாரணி. காங்கிரஸின் கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு. இரு கொள்கைகளும் ஒரு விதத்திலும் ஒத்துப் போகாது. காங்கிரஸ் கொள்கையைப் பின்பற்றிய விஜயதரணி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார் என்றால், அது மோசமான செயலாகும். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய விஜயதாரணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எதிர்க்கட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் குதிரைப் பேரம் செய்து எம்எல்ஏக்களை தங்களுடைய இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று மற்ற எம்எல்ஏக்களைப் பிடிக்கும் செயலை பாஜக செய்து வருகின்றனர். கொள்ளை புறமாகச் செய்யும் பாஜகவின் செயல் தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதாரணி பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் டெபாசிட் இல்லாத அளவிற்கு எங்களது கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம். விஜயதாரணி வெளியே சென்றதால் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது.
கட்சியில் உழைப்பவர்கள் அதிகமாக உள்ளனர். பெண் என்ற முறையில் தான் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவருக்குப் பல எதிர்ப்புகள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவருக்கு மட்டுமே சீட்டுக் கொடுக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு பாஜகவிற்குச் சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 133 வருடங்களைத் தாண்டிய பெரிய கடல். காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகம் வேறு எங்கும் கிடையாது.