சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், திமுக, நாதக என இருமுனை போட்டி நிலவியது.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 8) ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் 512 வாக்குகளைப் பெற்று, 91 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலெட்சுமி, 24 ஆயிரத்து 138 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தைப் பிடித்தும், டெபாசிட்டை இழந்துள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி:
இந்நிலையில், தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நன்றி. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் திமுகவின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். திமுக-வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி. தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.
அதிமுக மறைந்துக்கொண்டிருக்கிறது:
2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் திமுக கூட்டணி தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை அடைந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதுங்கிவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமல் அதிமுக மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில், சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலை தாண்டி, சாதனைகள் மக்கள் மனதில் பதிந்துள்ளது. தங்களது எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார். ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம்,” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.