தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்..பெரியாரை வசைபாடுவது நியாயமல்ல" - டி.எம் கிருஷ்ணாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு - MK STALIN WISHES TM KRISHNA

TM Krishan Issue: இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட நிலையில், அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.எம்.கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

MK STALIN WISHES TM KRISHNA
MK STALIN WISHES TM KRISHNA

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 2:25 PM IST

Updated : Mar 23, 2024, 2:31 PM IST

சென்னை: சென்னையின் 'தீ மியூசிக் அகாடமி' பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணாவுக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படும் என அறிவித்த நிலையில், பல்வேறு கர்நாடக இசை கலைஞர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், டி.எம் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ சிறந்த பாடகர் டி.எம் கிருஷ்ணா தீ மியூசிக் அகாடமியின் (The Music Academy) 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.

பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 98வது மார்கழி இசை நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாருக்கு ஆதரவு தெரிவித்து முற்போக்கு சிந்தனைகளுடன் பல்வேறு பாடல்களை கர்நாடக இசை மூலம் பாடி வரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படவுள்ளதை கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா முன்வைத்து வருகிறார் எனவும் பெரியாரைப் போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது எனக் கூறி, விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"செய்வதெல்லாம் செய்துவிட்டு பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" - திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை! - Lok Sabha Election 2024

Last Updated : Mar 23, 2024, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details