சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி வினையாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தம் அளிக்கிறது. இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால், மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.
எனவே, இலங்கைக் கடற்படையிளரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு உரிய வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.