சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு செய்தார்.
கனமழையால் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்halg மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை செயலாளர் அமுதா, மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை ஆணையர் லக்கானி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், "தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்துள்ளது. ஏற்கனவே 2 நாட்களாக மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அதனை மேற்பார்வையிட இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
பெரிய அளவில் பாதிப்பு இருந்ததாக தற்பொழுது வரை செய்தி இல்லை. எது வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. தென்காசிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஏற்கனவே சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் மழை பெய்ததால் அங்கு சென்றுள்ளார். தற்பொழுது மீண்டும் தென்காசிக்கு போக சொல்லி இருக்கிறோம்.