சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்தும், மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்த இன்று(செப் 26) டெல்லிக்கு புறப்பட்டார். அதன்படி நாளை காலை பிரதமரை முதலமைச்சர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சரின் டெல்லி பயணம் நோக்கம் : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டமே மெட்ரோ ரயில் திட்டம். இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் மத்திய அரசு நிதி உதவியுடன் குறிப்பிட்ட காலத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், மெட்ரோ திட்டத்தை விரிவாக்கும் வகையில், பொது போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடனும்,
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடனும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் 116 கிமீ தூரத்துக்கு 2ம் கட்ட பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த 2ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,746 கோடி நிதி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நேரில் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். இச்சந்திப்புக்கு பிறகு மத்திய அரசு நிதி ஒதுக்குமா? என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?
முன்னதாக, திமுக அமைச்சர்கள் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் :சர்வதேச கடன்களை பெற மாநில அரசுக்கு உதவுவதே பொருளாதார விவகாரத் துறையின் கடமையாகும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. சர்வதேச கடன்களை பெற மத்திய அரசு உதவியுள்ளது. இதுபோல கடனாக பெற்று தந்த நிதியில் ஒரு ரூபாயைக் கூட மாநில அரசு பயன்படுத்தவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில திட்டமாக கடந்த 2018ம் ஆண்டே மாற்றி தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மாநில அரசின் திட்டமாக தமிழ்நாடு அரசு மாற்றிக் கொண்டதால், அதற்கான முழு செலவையும் மாநில அரசுதான் ஏற்க வேண்டும்" என்றார்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் : சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசு காலதாமதம் செய்ததால் கடனுதவி பெற வேண்டி, தமிழக அரசே திட்டத்தை செயல்படுத்த துவங்கியது. இதை மத்திய அரசும் ஏற்றது.
இத்திட்டத்தை மத்திய அரசு திட்டமாக செயல்படுத்த கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொது முதலீட்டு குழு, மத்திய அமைச்சரவைக்கு முன்மொழிந்தது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், 2024-25 ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கெல்லாம் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தொடர்ந்து மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்குவதில், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது மெட்ரோ திட்டப்பணிகளை விரைவாக நிறைவடைய செய்வதில் சிரமத்தை கொண்டுவரும்" என தெரிவித்திருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்