சென்னை : தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமைய பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இம்மையம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இம்மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பட்சரை (Buzzer) பயன்படுத்தலாம்.
தரமான கட்டட வடிவமைப்பினை ஏற்படுத்தி, மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட Harmonized Guidelines 2021–ன்கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடைய இம்மையம் ரூ.3.08 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், ரூ.69 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சோழிங்கநல்லூர், எழில் நகரில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் மழலையர் பிரிவுக் கட்டடத்தை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி கலந்துரையாடினார்.