சென்னை:ஆந்திராவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (சனிக்கிழமை) விஜயவாடாவின் சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடைபெற்ற வாகன பேரணி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பிரச்சாரம் பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் தனது பேரணியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.